சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பழைய பாடப் புத்தகங்களே பயன்படுத்தப்பட உள்ளன.
பாடப் புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9.50 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதென்று அப்போது முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
இப்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது.
ஆராய வல்லுநர் குழு: சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எனவே, இந்தக் கல்வியாண்டில் பழைய பாட புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. முன்னதாக, அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், "ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும்" என்று கூறியிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் அதற்கான பணிகளில் அந்த அரசு ஈடுபட்டது.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆராய, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை 2007-ம் ஆண்டு அரசுக்கு அளித்தது.
சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு சில தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தத் திட்டத்தை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனாலும், இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது. இதையடுத்து, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டது.
இந்த நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளதால், பழைய புத்தகங்களை மாணவர்கள் தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment